நீலிவனநாதர் கோவிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா

நீலிவனநாதர் கோவிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா தொடங்கியது.

Update: 2022-07-24 19:51 GMT

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள பிரசித்தி பெற்ற நீலிவனநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ரிஷப வாகனம் வரையப்பட்ட கொடியை மேளதாளங்கள் முழங்க, கோவில் குருக்கள் கொடி மரத்தில் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கேடயத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து தினமும் இரவில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 31-ந்தேதி இரவு தங்கக்குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் 1-ந்தேதி நடைபெறுகிறது. 2-ந் தேதி நடராஜர் புறப்பாடும், 3-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் லட்சுமணன் அறிவுரையின்படி, கோவில் செயல் அலுவலர் முத்துராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்