தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள்

மடத்துக்குளம் அருகே அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-10-06 18:49 IST

போடிப்பட்டி

மடத்துக்குளம் அருகே அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிவேகம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது'கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மடத்துக்குளம் பகுதி வழியாக செல்கிறது.இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன.மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கல் குவாரிகள், செங்கல் சூளைகள், காகித ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.இதனால் தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் இந்த சாலையில் அதிவேகத்தில் பயணிக்கின்றன.அதிவேகத்தினாலும் அஜாக்கிரதையாலும் ஆங்காங்கே அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக மடத்துக்குளம் பஸ் நிலையத்தின் உள்ளே செல்லாமல் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

விபத்துப்பகுதி

மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, வங்கிகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன.இங்கு குமரலிங்கம்-காரத்தொழுவு சாலை தேசிய நெடுஞ்சாலையை குறுக்கே கடக்கிறது.ஆனால் இங்குள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படுவதில்லை.இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் பகுதியாக மாறியுள்ளது.எனவே இந்த பகுதிகளில் விபத்துக்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.மேலும் மடத்துக்குளத்திலிருந்து உடுமலை செல்லும் சாலையில் மைவாடி பகுதிக்கு அருகில் தனியார் உணவகம் உள்ளது.இந்த பகுதியில் சாலை லேசான வளைவுடன் காணப்படுகிறது.அதிவேகத்தில் வரும் வாகனங்களால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.எனவே விபத்துப் பகுதி என எச்சரிக்கும் வகையில் சாலை வளைவின் இருபுறமும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்