பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிபழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் நிலையம் முற்றுகை
தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியில் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவின் போது, தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேரை தாக்கியதாக 7 பேர் மீது போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ருக்மணி என்ற பெண் உள்பட சிலரை தாக்கியதாக, மனோஜ்குமார், மலைச்சாமி உள்பட 18 பேர் மீது போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று வந்தனர். போலீஸ் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.
வாக்குவாதம்
தங்கள் ஊரில் நடந்த பிரச்சினை தொடர்பாக போலீசார் முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். சம்பந்தப்பட்டவர்களின் அதிகாரத்தை பார்த்து வழக்குப்பதிவு செய்யாமல் ஒருதலைப்பட்சமாக போலீசார் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் அங்கு வந்தார். மக்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பிரச்சினை தொடர்பாக மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.