அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் வாகனங்கள் எரிப்பு
மதுரை அருகே அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
மதுரை அருகே அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் எம்.எல்.ஏ.
மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் கடந்த 2001-2006-ல் சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
தற்போது, அவர் கருவனூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி கருவனூரில் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவதில் ஏற்பட்ட தகராறில், பொன்னம்பலத்தின் மருமகன் பழனிசாமிக்கும், தி.மு.க.வைச் சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வாகனங்கள் எரிப்பு
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் வீட்டின் மீது ஒரு கும்பல் கற்கள் வீசியதுடன், வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியது. மேலும், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பொன்னம்பலத்தின் காருக்கும் அந்தக்கும்பல் தீ வைத்தது. இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் உள்ளிட்ட இருதரப்பை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றிற்கு சிலர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் அந்த வாகனங்கள் தீக்கிரையாகி சேதம் அடைந்தன.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டதால் கருவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.