அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டம்
பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டம்;
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட சமாதானபுரம் பகுதியிலுள்ள நவீன கழிப்பறை டெண்டர் விடும் பணி நேற்று நடந்தது. இதில் ஒரு நபருக்கு சாதகமாக டெண்டர் விடப்பட்டதாக மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அ.தி.மு.க.வினர் மனு கொடுக்க பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு சென்றனர். உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்சா மனுவை பெற்றுக்கொள்ளவில்லை என கூறி, அ.தி.மு.க.வை சேர்ந்த மாரியம்மாள், அன்பு அங்கப்பன் உள்ளிட்டோர் உதவி ஆணையாளர் அறை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்சா அங்கு வந்து அவரிடம் மனுவை பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.