விவசாய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
அம்பை வாகைகுளத்தில் விவசாய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.;
அம்பை:
அம்பை அருகே வாகைக்குளம் ஊராட்சியில் விவசாய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அம்பை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியை அம்பை யூனியன் தலைவர் சிவனுபாண்டியன் என்ற பரணிசேகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி நந்தகுமார், துணைத்தலைவர் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் கற்பகராஜ்குமார் வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் முருகன் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கி கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி உழவன் செயலி பதிவேற்றம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான உழவன் செயலி பதிவேற்றம், வேளாண் அடுக்கு திட்டம் மூலம் விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கலைக்குழுவினர் தப்பாட்டம், பறையாட்டம், கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலம் கிராம மக்களுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, சாமிராஜ், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.