‘இந்தி எதிர்ப்புப் போராட்டம்-முழுமையான அரசு ஆவணங்கள்’ - நூலை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

எழுத்தாளர் அ.வெண்ணிலா தொகுத்த நூல் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்றுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2025-12-22 14:11 IST

சென்னை,

‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ என்ற நூலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.12.2025) தலைமைச் செயலகத்தில், எழுத்தாளரும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் உதவி பதிப்பாசிரியருமான அ.வெண்ணிலா தொகுத்த ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம்-முழுமையான அரசு ஆவணங்கள்’ என்ற நூலை வெளியிட, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார். இந்நூல் தொகுப்பு, தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்றுத் துறையின் சார்பில் வெளியாகிறது.

இந்நூலானது, 1927-ம் ஆண்டு சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் 1967-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், இந்தியை கட்டாயமாக்க அன்றைய மத்திய, மாநில அரசுகள் எடுத்த தொடர் முயற்சிகள், அரசின் முயற்சிகளை முறியடிக்க சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்ச் சங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழார்வலர்கள் முன்னெடுத்த போராட்டங்கள், போராட்டத்தை ஒடுக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள், போராட்டங்களில் கொல்லப்பட்டோர், தீக்குளித்தோர், காயம்பட்டோர், பொது உடைமைகளுக்கு உண்டான சேதம், கொல்லப்பட்ட காவலர்கள், காவலர்கள் மீதான தாக்குதல், இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான சட்டப்பேரவை, சட்ட மேலவை விவாதங்கள், அரசின் ரகசிய ஆவணங்கள், ரகசிய ஆவணங்களை அழிப்பதற்காக கொடுக்கப்பட்ட உத்தரவுகள், பொதுத்துறை, சட்டத்துறை, கல்வித்துறைகளில் இருந்து காலவாரியாக தொகுக்கப்பட்ட ஆவணங்களின் அட்டவணையே ஆகும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்று, சிறையிலேயே மரணித்த நடராஜன்-தாளமுத்துவின் இறப்பு பற்றிய விவரங்கள், போராட்டத்தின் வெற்றிக்காக தீக்குளித்தோர் விவரம், பல்வேறு ஊர்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு, கொல்லப்பட்டவர்கள் என ஒவ்வொரு ஊரிலும் நடந்த நிகழ்வுகள் குறித்து படிக்கையில், தமிழ்நாடு தன் அடையாளத்தைத் தக்க வைப்பதற்காக நடத்திய தனித்துவப் போராட்டத்தைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

ஆய்வாளர்கள், பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய ஆவணங்களுக்கான அட்டவணை நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா, உயர்கல்வித் துறையின் செயலாளர் முனைவர் பொ.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்