20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;

Update:2025-12-22 14:12 IST

சென்னை,

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழ்நாட்டின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், திறன் வகுப்பறைகள் அமைத்தல், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைத்தல், மாதிரி பள்ளிகளை உருவாக்குதல், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களோடு, மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள 60 அரசுப் பள்ளிகளில் 96.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 392 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள், 4 ஆய்வகக் கட்டிடங்கள், 16 மாணவர்/மாணவியர் கழிப்பறைக் கட்டடங்கள், 8 குடிநீர் வசதிப் பணிகள்;

கடலூர் மாவட்டம் – கடலூர் வட்டம், மஞ்சக்குப்பம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் – விக்கிரவாண்டி வட்டம், கெடார் கிராமம் ஆகிய இடங்களில் 113.68 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் விடுதிக் கட்டிடங்கள்;

பொது நூலக இயக்ககத்தின் சார்பில் சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் 17.82 கோடி ரூபாய் செலவில் 20 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்கள் மற்றும் கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் - கீழ்வேளூர் ஆகிய இடங்களில் 1.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள்;

என மொத்தம் 229 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நூலகக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பொது நூலக இயக்ககத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகத்திற்கு 4.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்