பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் சோதனை - கணக்கில் வராத ரூ.1½ லட்சம் பறிமுதல்

பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய 10 மணி நேர அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-18 08:41 GMT

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 28 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நடைபெற்று வரும் சாலை, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிப் பணிகள் மற்றும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகளை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூந்தமல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் உள்ள காலி மனை, வீட்டுமனை, வீடு கட்ட அனுமதி, வரைபட அனுமதி உள்பட பல்வேறு பணிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இதனால் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலிருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு லவக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அதிரடியாக வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, பொறியாளர் அறை, மேலாளர் அறை, உள்பட அனைத்து அறைகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையிட்டனர். மேலும் அந்த அலுவலகத்துக்கு வந்தவர்களை சோதனை செய்ததில் ஒருவரிடமிருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடந்த சோதனையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மீது பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து வந்த லஞ்ச புகார்களையடுத்து, இந்த சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்தனர். மேலும் 10 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்