அடிப்படை வசதிகள் கேட்டு நரிக்குறவர் இன மக்கள் கலெக்டரிடம் மனு

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு நரிக்குறவர் இன மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-04-17 19:30 GMT

அடிப்படை வசதிகள் வேண்டும்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 268 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் செந்துறை பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் அளித்த மனுவில், செந்துறை ஒன்றியத்தில் செந்துறை ராயல் சிட்டியில் 52 குடும்பங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் 12 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால் தங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீடு, குடிநீர், சாலை வசதி, மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து பலமுறை பல்வேறு அதிகாரிடமும் மனு அளித்தாலும் தங்களது நிலைமை மாறவில்லை. மழை பெய்யும்போது வீடுகளில் குடியிருக்க முடியவில்லை. சாலையில் நடக்க முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அரசு சார்பில் வீடு கட்டி தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தொற்று நோய் ஏற்படும் அபாயம்

குறுமஞ்சாவடி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அளித்த மனுவில், குறுமஞ்சாவடி செந்துறை ரவுண்டானாவில் இருந்து சிந்தனை மார்க்கம் செல்லும் வழியில் மேல்புறம் அழகம்மாள் நகரும், கீழ்புறம் தென்றல் நகரும் அமைந்துள்ளன. சாலையின் இருபுறமும் பல சரக்கு கடைகள், உணவு விடுதிகள், ஆட்டோமொபைல் கடைகள் என பல்வேறு கடைகள் உள்ளன. இவைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய் இல்லாத நிலையில் சாலையில் விடப்படுகிறது. இதனால் சாலைகள் சேதாரம் அடைவதோடு தொற்றுநோய் ஏற்படவும் காரணமாக உள்ளது.

எனவே சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் கால்வாய் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையில் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் எனவே மாவட்ட நிர்வாகம் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதேபோல் பலர் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்