ஏரல் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ஏரல் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-26 18:45 GMT

ஏரல்:

ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி நேற்று ஏரல் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கருகி வரும் வாழைகள்

ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் பாசனத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படாததால் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைகள் கருகும் நிலையில் உள்ளது. இந்த வாழைகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக் கோரி வடகால் பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நெல்லை தாமிரபரணி செயற்பொறியாளர் மற்றும் கலெக்டரிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்த நிலையில் அந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஏரல் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நம்பிராஜன், மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், ஏரல் தாலுகா செயலாளர் சுப்புத்துரை, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் லட்சுமிபுரம், மாரமங்கலம், தீப்பாச்சி, சேர்வைக்காரன்மடம், கணபதிசமுத்திரம், வாழவல்லான் கூட்டாம்புளி, ஏரல் மற்றும் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை

விவசாய சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் தாசில்தார் கைலாச குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கருகி வரும் 10 ஆயிரம் வாழைகளை காப்பாற்ற உடனடியாக வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என கூட்டமைப்பு பிரதிநிதிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து காலையில் தொடங்கி போராட்டம் மாலை வரை நடந்தது. இந்த போராட்டத்தால் ஏரல் தாலுகா அலுவலகம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

சாலை மறியல்

இந்த போராட்டத்திற்கு அதிகாரிகள் தரப்பில் உரிய பதில் கூறப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் முக்கானி ரவுண்டானாவில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக, வடகால் பாசனம் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்