அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் உழைப்பவர்கள்; த.வெ.க.விலோ... கே.பி.முனுசாமி பரபரப்பு பேச்சு
அ.தி.மு.க.வில் உடனடியாக பதவி கிடைக்காது என்றும் உழைப்பவருக்கான கட்சி இது என்றும் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசும்போது, விஜய் கட்சி ஆரம்பிக்கும்போது தன்னுடைய ரசிகர்களுடன் ஆரம்பித்தார். அத்துடன் இருந்திருந்தால் ஒரு தனித்தன்மை உள்ள கட்சி என்று கூறி இருக்கலாம்.
ஆனால் தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து உங்களுடன் வந்துள்ளார்கள். அவ்வாறு வந்துள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள். எங்கு வசதியான தலைமை பொறுப்பு கிடைக்கும், அடுத்த தேர்தலில் எப்படி நாம் பதவிக்கு வரலாம் என்று நினைப்பவர்கள்தான் விஜய் உடன் சேர்ந்துள்ளார்கள். அ.தி.மு.க.வில் உடனடியாக பதவி கிடைக்காது.
உழைப்பவருக்கான கட்சி இது. அதனால்தான் கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார். இங்கு இருப்பவர்கள் எல்லாம் உழைப்பவர்கள். ஆனால் அங்கு சென்று இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று பரபரப்பாக பேசியுள்ளார்.