தியாகதுருகத்தில் போலீஸ்காரர் வீடு உள்பட 2 வீடுகளில் ரூ.3½ லட்சம் நகை-பணம் கொள்ளை ஆசிரியர் வீட்டில் திருட முயற்சி

தியாகதுருகத்தில் போலீஸ்காரர் வீடு உள்பட 2 வீடுகளில் ரூ.3½ லட்சம் நகை-பணம் கொள்ளை போனது. மேலும் ஆசிாியர் வீட்டிலும் திருட முயற்சி நடந்துள்ளது.

Update: 2023-05-04 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயன் சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இதனால் உஷா தனது 2 குழந்தைகளுடன் வடதொரசலூரில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் உஷா தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீடான சித்தால் கிராமத்திற்கு சென்றார். மீண்டும் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்றுபார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. உஷா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

போலீஸ்காரர் வீடு

இதேபோல் தியாகதுருகம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் கோபி. இவருடைய மனைவி காஞ்சனா (38). போலீஸ்காரராக பணியாற்றி வந்த கோபி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து காஞ்சனா தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் இவர் இரவில் மட்டும் தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு காஞ்சனா, தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை காணவில்லை. இவற்றையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்

மேலும் இதே பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகாராஜா (39) என்பவருடைய வீட்டின் முன்பக்க கதவையும் மர்மநபர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் வீட்டில் பணம் மற்றும் நகைகள் இல்லாததால் மர்ம நபர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை நடத்தி ரூ.3½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாள் இரவில் போலீஸ்காரர் வீடு உள்பட 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்