அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-10 14:52 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செய்ய பெற்றோர்கள் ஆர்வம் காட்டும் வகையில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட கலெக்டர் மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலை வகித்தார்.

துண்டு பிரசுரம் வினியோகம்

இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்கள், பெற்றோர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு, விலையில்லா சீருடைகள், புத்தகப்பை, வண்ண பென்சில்கள், கிரையான்ஸ், நில வரைபடம், கணித உபகரண பெட்டி, காலணிகள், பஸ் பயண அட்டை, கல்வி உதவித்தொகை ஆகியவற்றை இலவசமாக பெற்று உயர்கல்வி வரை படிப்பதற்கும், அதேபோல் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பெறுவதற்கும், அரசு பள்ளியில் சேர்ந்து அனைத்து திட்டங்களையும் பெற்று பயன்பெற வேண்டும் என்ற வாசகங்களை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

இவர்களுடன் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோரும் பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பாலமுருகன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபுசெல்வத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்