சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு பாலாபிஷேகம்

Update: 2023-04-25 20:04 GMT

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.

சுகவனேசுவரர் கோவில்

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் திருவெம்பாவை பெருவிழா கழகம் டிரஸ்ட் சார்பில் 20-ம் ஆண்டு 63 நாயன்மார்கள் வீதி உலா நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை கோவிலில் ருத்ர பாராயணம், அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் அன்னம்பாலிப்பு போன்றவை நடைபெற்றது.

63 நாயன்மார்களுக்கு எண்ணெய் காப்பு மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு வலம்புரி விநாயகர், சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது.

வீதி உலா

காலை 9.30 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் மாதர் பஜனை குழுவினரின் தெய்வீக பாடலிசையும், 5.15 மணிக்கு அருளாசிகள் மற்றும் உலா தொடக்க விழா நடக்கிறது. மாலை 6 மணிக்கு துறவிகள், அறவோர், ஆன்றோர் ஆகியோர் முன்னிலையில் அறுபத்து மூவர் திருவீதி உலா நடக்கிறது.

இந்த உலா சுகவனேசுவரர் கோவிலில் தொடங்கி முதல் அக்ரஹாரம், தேர்வீதி, பட்டை கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக கோவிலுக்கு வந்தடைகிறது.

மேலும் செய்திகள்