இளையான்குடி அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு வி.சி.க. கொடியை ஏற்றி சென்ற மர்ம நபர்கள்

இளையான்குடி அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசி, அவரது வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை மர்ம நபர்கள் ஏற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-12 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசி, அவரது வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை மர்ம நபர்கள் ஏற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு விசவனூரை சேர்ந்தவர் டாக்டர் ராமசாமி. ஆர்.எஸ்.எஸ். பிரமுகராகவும், தேசிய லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். பெரும்பாலும் இவர் டெல்லியில் உள்ள வீட்டில்தான் வசிப்பது வழக்கம். இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி வடக்கு விசவனூர் கிராமத்திற்கு வந்தார். இதற்கிடையே ராமசாமி மதுரையில் உள்ள தனது உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து காரில் மீண்டும் ஊர் திரும்பிய அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நாட்டு வெடிகுண்டு வீச்சு

அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அது வெடிக்கவில்லை. இதையடுத்து அந்த மர்மநபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும், சுவர் மற்றும் முன்பக்க கதவிலும் கற்களை வீசி சேதப்படுத்தினர். சுவரில் கருப்பு மையை பூசினர். அவருடைய வீட்டின் முன்பு இருந்த விவேகானந்தர் சிலை மீதும் கற்களை வீசி சேதப்படுத்தினர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றிவிட்டு தப்பி சென்றனர்.

அதிகாலை 5½ மணியளவில் ராமசாமி நடைபயிற்சிக்காக எழுந்து வெளியே வந்து பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கதவு, ஜன்னல் கண்ணாடி, விவேகானந்தர் சிலை சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டார்.

பரபரப்பு

இதுகுறித்து அவர் உடனடியாக சாலைக்கிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது தான் சொந்த ஊருக்கு வரும்போது எல்லாம் மர்ம நபர்கள் தனது கார் மற்றும் வீடு மீது கற்களை வீசி தாக்குவது தொடர்கதையாக உள்ளதாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்