மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள கே.அக்ரஹாரம் கிராமத்துக்கு பஸ் வசதியின்றி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தர்மபுரியில் இருந்து கம்பைநல்லூர் வழியாக பெரமாண்டப்பட்டி வரை இயங்கி வந்த அரசு பஸ்சை கே.அக்ரஹாரம் வரை இயக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் கே.அக்ரஹாரம் வரை நீட்டிக்கப்பட்டது. புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் மொரப்பூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரத்னவேல், அவைத்தலைவரும், முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவருமான பன்னீர்செல்வம், ம.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெகநாதன், மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி தெய்வம், இளைஞரணி நிர்வாகி ராசி தமிழ், ஊர் பிரமுகர்கள் நாகேந்திரன், சின்னசாமி, சொக்கலிங்கம், கிருஷ்ணன், சிங்காரம், திருப்பதி, ரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.