மணவாளக்குறிச்சி அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; மீனவர் பலி நண்பர்கள் 2 பேர் படுகாயம்

மணவாளக்குறிச்சி அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீனவர் பரிதாபமாக இறந்தார். அவரது 2 நண்பர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.;

Update:2023-03-06 00:15 IST

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீனவர் பரிதாபமாக இறந்தார். அவரது 2 நண்பர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மீன்பிடி தொழிலாளி

நாகர்கோவில் தங்கராஜ்நகர் ஹென்றிரோடை சேர்ந்தவர் பிரிட்டோ. இவரது மகன் ரிஜிமோன் என்ற சூர்யா (வயது23), மீனவர். கடலில் மீன் பிடித்தொழில் செய்து வந்தார். இவரும், கடியபட்டணம் மீனவர் கிராமத்தை சேர்ந்த ஜாக்சன் பிரபாகரன் (25), சகாய நிக்சன் (25) ஆகியோரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் மாலையில் நண்பர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து கடியபட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரிஜிமோன் ஓட்டினார்.

கார் மோதியது

அவர்கள் மணவாளக்குறிச்சி அருகே வெள்ளமோடி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நண்பர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரிஜிமோன் சூர்யா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சகாய நிக்சன், ஜாக்சன் பிரபாகரன் ஆகியோர் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கீழ மணக்குடியை சேர்ந்த அந்தோணி சுபின் (36) மீது மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்