கச்சநத்தம் வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து இடையூறுகள் வந்தன

கச்சநத்தம் வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து இடையூறுகள் வந்தன என்று அரசு வக்கீல்கள் தெரிவித்தனர்.

Update: 2022-08-05 18:40 GMT


கச்சநத்தம் வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து இடையூறுகள் வந்தன என்று அரசு வக்கீல்கள் தெரிவித்தனர்.

அரசு வக்கீல்கள் பேட்டி

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் நடந்த 3 பேர் கொலை வழக்கில் சிறப்பு அரசு வக்கீலாக சின்ன ராஜா ஆஜராகி வாதாடினார். நேற்று குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டதும் வக்கீல் சின்ன ராஜா மற்றும் சிவகங்கை தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற அரசு வக்கீல் துஷாந்த் பிரதீப்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தற்போது சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. விசாரணையின்போது ஜாமீனில் வெளியே விடவில்லை என்பதற்காக ஒருவர் கோர்ட்டில் கழுத்தை அறுத்துக்கொண்டார். அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதே போல மற்றொரு சம்பவமாக விசாரணையின்போது, குற்றவாளி ஒருவர், சாட்சியை நேரடியாக மிரட்டியது பற்றியும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே போல் கோர்ட்டில் வைத்து குற்றவாளிகள் அவர்களுக்குள் தாக்கிக்கொண்டனர். இதனால் 3-வதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதுபோன்று வேறு எந்த வழக்கிற்கும் இடையூறுகள் வந்தது கிடையாது.

நீதிபதிக்கு கடிதம்

தற்போது கூட இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், காளையார்கோவிலில் இருந்து ஜானகிராமன் என்பவர், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது குறித்து நீதிபதிக்கு பதிவு தபால் அனுப்பி உள்ளார்.

கோர்ட்டை அவமதித்ததாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. போலீசார் தற்போது அளிக்கும் பாதுகாப்பை கடந்த 2018-ம் ஆண்டு அளித்திருந்தால் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து இருக்காது. இருந்தாலும் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஒரு பாடமாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அச்சுறுத்தல்கள்

கச்சநத்தம் சம்பவத்தின் போது 5 பேர் காயம் அடைந்தனர். இதில் சிகிச்சைக்கு பின்பு உயிர்பிழைத்த சுகுமார் கூறியதாவது:-

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைத்து உள்ளது. இருந்தாலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை எதிர்பார்த்தோம். ஆனால் அது கிடைக்காதது ஏமாற்றமாக உள்ளது. இன்றும் கூட எங்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே கச்சநத்தம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்