திருவாடானையில் சினேகவல்லிஅம்மன் கோவில் தேரோட்டம்

திவாடானையில் சினேகவல்லி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2022-06-11 18:39 GMT

தொண்டி, 

திவாடானையில் சினேகவல்லி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வைகாசி விசாக திருவிழா

திருவாடானையில் தமிழகத்தின் மிகப்பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சினேக வல்லி சமேத ஆதிரெத்தி னேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழா நடைபெற வில்லை. இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக சாமி- அம்மன் கோவிலில் இருந்து நேற்று காலை பரிவார தெய்வங்களுடன் தேர் நிலைக்கு எழுந்தருளினர்.

மாலை 3 மணி அளவில் ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் நாட்டார்கள், பொதுமக்கள், நகரத்தார்கள் ஆலயத்தில் இருந்து மேளதாளம் முழங்க தேரை நிலைக்கு இழுத்து சென்றனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு ராஜமரியாதை, நாட்டார் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. 3.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பெரிய தேரில் சிநேகவல்லி அம்மனுடன் ஆதிரெத்தினேசுவரரும் சின்ன தேரில் பிரியாவிடையும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்கள் பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர்.

தேர்தடம் பார்த்தல்

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நாட்டார்கள் தேர் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். பெரிய தேரின் முன்பு விநாயகரும், வள்ளி- தெய்வானை, முருகன், அம்மன், சண்டிகேஸ்வரர் சிறிய தேரில் ஊர்வலமாக வந்தனர். தேர் சரியாக 6.18 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்-மோர் குளிர்பானங்கள் தண்ணீர் வழங்கப் பட்டது. சரகப்பொறுப்பாளர் பாண்டியன் திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு மற்றும் நாட்டார்கள், நகரத்தார்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்