கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை அமைக்க இடம் தேர்வு
நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு சிலை அமைக்கப்பட உள்ள இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
டாக்டர் சுப்பராயன்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சென்னை மாகாண முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் செல்வராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் ஆய்வு செய்த அவர், கவிஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் இந்த ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பான நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில், அவருக்கு மார்பளவு சிலை அமைப்பதற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒப்பளிப்பு பெறப்பட்டு உள்ளதை தொடர்ந்து, கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் அவருக்கு அமைக்கப்பட உள்ள உருவ சிலை அமைவிடத்தையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அரசு செயலாளர் ஆய்வு
மேலும் ஜேடர்பாளையத்தில் காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து, ராஜ வாய்க்கால் அமைத்த அல்லாள இளைய நாயகருக்கு ரூ.26.36 லட்சம் மதிப்பில் குவிமாடத்துடன் சிலை அமைக்கப்பட்டு உள்ளதையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் செல்வராஜ், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.