பிரதமர் மோடி பாராட்டிய கோவை ஓவியர்

மன் கி பாத் நிகழ்ச்சியில் கோவை ஓவியரை பிரதமர் மோடி பாராட்டினார். இது மிகப்பெரிய அங்கீகாரம் என்று ஓவியர் ராகவன் சுரேஷ் கூறினார்.;

Update:2023-07-31 00:15 IST
வடவள்ளி


மன் கி பாத் நிகழ்ச்சியில் கோவை ஓவியரை பிரதமர் மோடி பாராட்டினார். இது மிகப்பெரிய அங்கீகாரம் என்று ஓவியர் ராகவன் சுரேஷ் கூறினார்.


பிரதமர் மோடி பாராட்டு


பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். அது போல் நேற்று அவர் பேசும் போது, சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.


அப்போது தமிழ்நாட்டின் கோவையை அடுத்த வடவள்ளியை சேர்ந்த ஓவியர் ராகவன் சுரேஷ் செய்து வரும் 'அழிந்து வரும் தாவரங்கள், உயிரினங்கள் குறித்து ஓவியங்கள் வரைந்து ஆவணப்படுத்த முயற்சி எடுத்து வருவது குறித்து குறிப்பிட்டு பேசி பாராட்டினார்.


கோவை ஓவியர்


பிரதமர் மோடி பாராட்டிய ஓவியர் ராகவன் சுரேஷ் (வயது59) பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா நிறுவனத்தில் ஓவியராக பணிபுரிந்து வருகிறார். அவர், அழியும் தருவாயில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை தத்துரூபமான ஓவியமாக வரைந்து வருகிறார்.


இவர், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை 350-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை மிகத் துல்லியமாக உரிய தகவல்களோடு ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்தி உள்ளார்.


மிகப்பெரிய அங்கீகாரம்


இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த தனது ஓவியம் குறித்து பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியதை அறிந்து ஓவியர் ராகவன் சுரேஷ் மகிழ்ச்சி அடைந்தார். அவர் இது குறித்து கூறியதாவது:-


எனது ஓவியம் குறித்து குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டியது தனக்கும் தனது முயற்சிக்கும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும். இதற்காக பிரதமருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், தாவரங்கள், பறவைகள், விலங்குகள் உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஓவியங்களை வரைந்து உள்ளேன்.


விழிப்புணர்வு பெற வேண்டும்


அழிந்து வரும் உயிரினங்கள் குறித்து அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இயற்கை குறித்து அனைத்து தரப்பினரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவும் ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.

இந்த ஓவியங்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் காட்சிப்படுத்த உள்ளேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்