குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
குற்றால அருவிகளில் மிதமாக விழும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.;
தென்காசி,
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலத்துக்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் குற்றால அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்து வருகிறது. இருந்தபோதும், இங்கு எந்நேரமும் குளுகுளு சூழல் நிலவுகிறது.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டுதேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதனை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பலரும் சுற்றுலா பகுதிகளை நாடி செல்கின்றனர். அந்த வகையில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வார விடுமுறை என்பதாலும், காலை முதலே சுற்றுலா பயணிகள் திரண்டனர். மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் பலரும் இங்கு வந்து புனித நீராடிவிட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.
குழந்தைகளுடன் வந்த அவர்கள் அருவிகளில் குளித்துவிட்டு அருவிக்கரைகளில் உள்ள கடைகளில் தேநீர், தின்பண்டங்கள், உணவு வகைகளை வாங்கி ருசித்தனர். இதனால் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. அதிகளவில் வியாபாரம் நடைபெறுவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். நேரம் செல்லச்செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.