‘2025-ல் இந்தியாவின் தாக்கம் எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிந்தது’ - பிரதமர் மோடி
2025-ம் ஆண்டு இந்தியாவின் விளையாட்டுத் துறைக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
2025-ம் ஆண்டில் இந்தியாவின் தாக்கம் எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிந்தது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்த ஆண்டின் கடைசி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் இன்று அவர் பேசியதாவது;-
“2025-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பெருமைமிக்க மைல்கற்களைக் கொண்ட ஆண்டாக அமைந்தது. தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகின் மிகப்பெரிய துறைகள் என எதுவாக இருந்தாலும், இந்தியாவின் தாக்கம் எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிந்தது.
ஆண்களுக்கான கிரிக்கெட் அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும், பெண்களுக்கான கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பையையும் வென்றதன் மூலம், 2025-ம் ஆண்டு இந்தியாவின் விளையாட்டுத் துறைக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. மேலும், இந்தியாவின் மகள்கள் மகளிர் பார்வையற்றோருக்கான டி-20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தனர்.
ஆசிய கோப்பை டி-20 போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றதன் மூலம் மூவர்ணக் கொடி பெருமையுடன் வானில் பறந்தது. மேலும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்று தாயகம் திரும்பினர். அறிவியல் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா ஒரு மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியர் ஆனார்.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.