தர்மபுரி மாவட்டத்தில்6.37 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்

Update: 2023-08-17 19:00 GMT

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 6 லட்சத்து 37 ஆயிரத்து 352 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை கலெக்டர் சாந்தி தொடங்கிவைத்தார்.

குடற்புழு நீக்க மாத்திரைகள்

தமிழ்நாடு முதல்- அமைச்சர் வழிகாட்டுதலின்படி தேசிய குடற்புழு நீக்க தின முகாம் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த முகாமை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். இந்த முகாமில் தேசிய குடற்புழு நீக்க தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் 1333 அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், 225 துணை சுகாதார நிலையங்களிலும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்வி நிறுவனங்களிலும் மொத்தம் 6 லட்சத்து 37 ஆயிரத்து 352 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த மாத்திரையை வழங்கும் பணியில் 1741 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

குழந்தைகள் சாப்பிடுகின்ற உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு முழுமையாக கிடைப்பதற்கு உடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்காக குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரை குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் குடற்புழுவை அழிக்கும் வகையில் அல்பெண்டாசோல் மாத்திரை 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மில்லிகிராம் அளவிலும், 2 வயதிற்கு மேல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லிகிராம் அளவிலும் வழங்கப்பட்டது.

இதேபோல் 20 வயது முதல் 30 வயது வரை கொண்ட பெண்களுக்கு 400 மில்லிகிராம் அளவிலும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தேவி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்