நுகர்வோரின் உரிமைகள் குறித்துபள்ளி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

Update:2023-03-31 00:30 IST

நுகர்வோரின் உரிமைகள் குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த உலக நுகர்வோர் தின விழாவில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

விழிப்புணர்வு

உலக நுகர்வோர் தின விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கு உதவிட பாதுகாப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்களை உருவாக்கி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பின்னர் அவர்கள் மூலமாக பொதுமக்களுக்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தரமான உணவு பொருட்கள்

பொதுமக்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது இந்த சட்டத்தின் நோக்கம் ஆகும். எனவே பொதுமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும். பொருட்களை வாங்கும் போது நுகர்வோர்களுக்கு இருக்கும் உரிமைகள், கடமைகளை முழுமையாக தெரிந்து கொண்டு அவற்றைப் பின்பற்ற வேண்டும். மற்றவர்களுக்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார். நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவையொட்டி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை அப்போது கலெக்டர் வழங்கி பாராட்டினார். விழாவில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ராஜேந்திரன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா, மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத் தலைவர் அண்ணாமலை மற்றும் நுகர்வோர் தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்