மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் ஆய்வு
குத்தாலம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளின் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.;
குத்தாலம்:
குத்தாலம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளின் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.
மாணவிகளிடம் கலந்துரையாடல்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளின் கற்றல் திறன் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார். அப்போது 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளிடம் கலந்துரையாடினார். பொதுத்தேர்விற்கு மாணவிகள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தினசரி பாடத்தை தொடர்ந்து படிக்க வேண்டும். திரும்ப, திரும்ப படித்தால் பள்ளி பாடத்தினை நன்கு புரிந்து கொள்ளலாம்.
கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தங்களின் கற்றல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியும், உழைப்பும் உங்களின் கல்வித்தரத்தை உயர்த்தும். எனவே நன்கு படித்து ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் நன்மதிப்பை பெற்றுத்தர வேண்டும் என்றார்.
பாடங்களிலிருந்து கேள்வி...
முன்னதாக 12-ம் வகுப்பு மாணவிகளிடம் இதுவரை நடத்தப்பட்ட பாடங்கள் குறித்து கேட்டறிந்து அதில் இருந்து மாணவிகளிடம் கேள்விகளை கேட்டார். தொடர்ந்து, பள்ளி சமையல் கூடத்தை பார்வையிட்டு பள்ளி மாணவிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவின் வகைகள் மற்றும் பயன்பெறும் மாணவிகளின் எண்ணிக்கை விவரங்களை தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வில் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, தலைமை ஆசிரியர் அருள்மொழி மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.