வணிகவரித்துறையினர் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும்

Update:2023-02-08 01:00 IST

சேலம் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க சேர்மன் மோகன், தலைவர் நாகேஷ், செயலாளர் அருணாசலம், பொருளாளர் பத்ரிநாராயணன் மற்றும் உறுப்பினர்கள் நேற்று அஸ்தம்பட்டியில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இணை இயக்குனர்கள் நாராயணன், ஜெயராமன் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

பொதுமக்களுக்கு தேவைப்படும் அன்றாட பொருட்களை தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கி சில்லறை வணிகர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். மாதந்தோறும் முறையாக ஜி.எஸ்.டி. வரி அரசுக்கு செலுத்தி வருகிறோம். ஜி.எஸ்.டி. வரியில் அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்களை தெளிவுப்படுத்தும் வகையில் அந்தந்த ஊர்களில் விளக்க வகுப்புகள் எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தநிலையில் வரி ஏய்ப்பு அல்லாத எழுத்துப்பிழை உள்ளிட்ட சில தவறுகளுக்கு கூட அதிகாரிகள் அபராதமாக அதிகதொகை விதிக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய விளக்கம் அளித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். இது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற தவறுகள் கவனக்குறைவாலும், தொழில்நுட்ப கோளாறுகளால் நடப்பவையே தவிர வரிஏய்க்கும் நோக்கத்தில் நடந்தவை அல்ல. எனவே சிறு தவறுகளுக்கு இனிவரும் காலங்களில் அபராதம் விதிப்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்