புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-04 19:00 GMT

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் சத்திரம் பாரதி பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடையில் வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனே நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

காட்சிப்பொருளான ரேஷன் கடை 

ஆலங்குளம் யூனியன் ஆர்.நவநீதகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து கருப்பினான்குளம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் அதனை திறக்காமல் பூட்டியே வைத்துள்ளனர். இதனால் ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது. எனவே காட்சிப்பொருளான ரேஷன் கடையை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-விஜய், கருப்பினான்குளம்.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

புளியங்குடியில் இருந்து சுரண்டை, பாபநாசம் வழியாக அம்பைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

சுகாதாரக்கேடு

செங்கோட்டை தாலுகா பண்பொழி மலைக்கோவில் நுழைவுவாயில் பின்புறம் பிளாஸ்டிக் பைகள் குவிந்து குப்பைக்கூளமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகள் வைத்து குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

சரிந்து விழும் நிலையில் மின்கம்பம்

ஆலங்குளம் தாலுகா வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து பூலாங்குளம் அருகே மாதாபட்டணம் கிழக்கு தெருவில் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-பிரீத்தி, மாதாபட்டணம்.

Tags:    

மேலும் செய்திகள்