புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-18 19:00 GMT

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் தெற்கு மடத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியின் கான்கிரீட் மூடி சேதமடைந்த நிலையில் இருப்பதாக ராஜசேகர் என்பவர் அனுப்பிய பதிவு `தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த கான்கிரீட் மூடி சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தெருவில் தேங்கிய கழிவுநீர் 

ஆலங்குளம் தாலுகா நல்லூர் இந்திரா நகரில் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள தெருவில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக தெருவின் முகப்பில் மட்டும் மண் நிரப்பப்பட்டது. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு தெருவில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-மகேந்திரன், இந்திராநகர்.

சாலையில் ஆபத்தான பள்ளம்

தென்காசி -அம்பை மெயின் ரோட்டில் பழைய குற்றாலம் பிரிவு அருகில் சாலையின் ஒருபுறத்தில் தோண்டி போட்டுள்ளனர். இதனால் அனைத்து வாகனங்களும் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. ரோட்டின் ஒருபுறமாக பள்ளம் இருப்பது தெரியாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளத்தினை சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன்.

-செய்யது முஹம்மது ஆசாத். ரஹ்மானியபுரம்.

தடுப்புச்சுவர் இல்லாத கிணறு 

சங்கரன்கோவில் தாலுகா வீரிருப்பு கிராமத்தில் உள்ள பொதுக்கிணற்றை தூர்வாருவதற்காக, அதன் தடுப்பு சுவரை இடித்து அகற்றினர். பின்னர் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டதால், கிணறு தரைமட்டமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே கிணற்றில் தூர்வாரும் பணியை விரைந்து நிறைவேற்றி, தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-செல்லத்துரை, வீரிருப்பு.

மண்குவியல் அகற்றப்படுமா?

கடையம் யூனியன் அலுவலக ரோட்டில் இருந்து பெட்ரோல் பங்க் வரை மண் குவிந்து கிடக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மண்ணில் சிக்கி கீழே விழுவதற்கு நேரிடுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி ரோட்டில் குவிந்திருக்கும் மண்ணை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

Tags:    

மேலும் செய்திகள்