நாட்டு பசு இனங்கள் அழிவில் இருந்து மீட்கப்படுமா?- கால்நடை ஆர்வலர்கள்
நாட்டு பசு இனங்கள் அழிவில் இருந்து மீட்கப்படுமா? என கால்நடை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.;
நாட்டு பசு இனங்கள் அழிவில் இருந்து மீட்கப்படுமா? என கால்நடை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது.
ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது தான் இந்த ஜல்லிக்கடடு விளையாட்டு.
மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் பிரசித்திப்பெற்றதாகும். இதேபோல் தஞ்சை, திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நாட்டு மாடு இனங்கள்
ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததை அடுத்து பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள் காரணமாக அந்த தடை நீக்கப்பட்டு தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாடிவாசல் வழியாக சீறி வரும் காளைகளையும், அதனுடன் இளைஞர்கள் வீர விளையாட்டு விளையாடுவதையும் காண கூட்டம் அலைமோதுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களுக்கு பிறகு அந்த வீர விளையாட்டு மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதற்கும், நாட்டு மாடு இனங்களை வளர்ப்பதற்கும் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
உடலுக்கு வலிமை
நாட்டு பசு மாட்டிற்கு எப்போதும் ஒரு தனி சிறப்பு உண்டு. மருத்துவ ரீதியாக நாட்டுப் பசு மாட்டின் பால் உடலுக்கு வலிமையை கொடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது. வளர்ப்பதற்கு பலர் ஆர்வமாக இருந்தாலும் நாட்டு பசு இனங்கள் பரவலாக கிடைப்பதில்லை. நாட்டு பசும்பாலை தேடி மக்கள் அலையும் நிலையும் உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக நாட்டு காளை மாடுகள் வளர்ப்பது அதிகரித்தாலும், நாட்டு பசுமாடு வளர்ப்பு என்பது குறைவாகவே உள்ளது. நாட்டு பசு இனங்களில் அழிவில் இருந்து மீட்டு அவற்றை பாதுகாத்து பாரம்பரிய மாடு இனங்களை அதிக அளவில் வளர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரபணு மாற்றம்
இதுகுறித்து நாட்டு பசு இனங்களை வளர்த்து வரும் சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தை சேர்ந்த அப்பாசாமி கூறியதாவது:-
அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் ஏராளமான நாட்டு பசு இனங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாடினங்களே அதிகம் வளர்கப்படுகின்றன. நாட்டு பசு இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
நான் நாட்டு பசு மாடுகளை மழைக்காலங்களில் திருவண்ணாமலை வனப்பகுதிகளில் மேய்த்து விட்டு கோடை நாட்களில் சொந்த ஊரான சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளுக்கு அழைத்து வந்து மேய்க்கிறேன்.
இயற்கை உரம்
நாட்டு பசுமாடுகளை தங்களுடைய தரிசு வயல்களில் கிடைக்கட்டி, இதன் சாணத்தை இயற்கை உரமாக பயன்படுத்தி சில விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். நாட்டு பசு மாடுகளை எந்தவிதமான இடையூறுகள் இல்லாமல் வளர்க்க வேண்டும். நான் அவற்றை கயிறு கொண்டு கட்டுவதில்லை.
நாட்டு பசுமாடுகள் குடும்ப உறுப்பினர்கள் போல நம்மிடம் பழகும் சுபாவம் கொண்டவை. மேயும்போது வழி தவறி சென்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து விடும். மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் எங்களிடம் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிக்காக நாட்டு காளைகளை வாங்கி செல்கிறார்கள். நாங்கள் இறைச்சிக்காக எந்த மாடுகளையும் விற்பனை செய்தது கிடையாது. எங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு பசு மாடுகள் உள்ளன.
கோமாரி நோய்
நாட்டு பசுக்கள் நோய் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படாது என்றாலும் சமீபத்தில் ஏற்பட்ட கோமாரி நோயினால் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்தன. இது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. நாட்டு மாடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்.
எனவே நாட்டு பசு மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு நாட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும்.
மண்ணின் தன்மை பாதுகாக்கப்படும்
எடமணல் கிராமத்தை சேர்ந்த விவசாயி இளங்கோவன்:- சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் சம்பா அறுவடை பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் விளைநிலங்களில் விவசாயிகள் பசுமாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை கிடை போட்டு வருகிறார்கள். இதனால் நாட்டு மாடுகளின் தேவை அதிகமாக உள்ளது. வயலில் மாட்டுக்கிடை போடுவதால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு அடி உரம் மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க செய்கிறது. இதனால் விளைநிலங்களில் உள்ள மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்பதன் மூலமாக இயற்கை முறை விவசாயமும் மேம்படும். எனவே நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.