தனியார் நிதிநிறுவன சொத்துக்களை ஏலம் விட கோர்ட்டு உத்தரவு

தனியார் நிதிநிறுவன சொத்துக்களை ஏலம் விட கோர்ட்டு உத்தரவு

Update: 2022-09-23 18:45 GMT

கோவை

கோவையில் நடந்த ரூ.3¾ கோடி மோசடி வழக்கில் தனியார் நிதிநிறுவன சொத்துக்களை ஏலம் விட கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ரூ.3¾ கோடி மோசடி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சிவசுவாதி அபிலாஸ் என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. கடந்த 2000-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரூ.125 பேரிடம் ரூ.3 கோடியே 88 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த நிறுவனத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து மொத்தம் 21 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் போலீசார் பறிமுதல் செய்த சொத்துக்களில் 19 சொத்துக்களை ஏலம் விட நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் உள்ள ஐகோர்ட்டில் தடைஆணை பெற்றனர்.

ஏலம் விட உத்தரவு

இதன் காரணமாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் அரசு தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததன் விளைவாக, 19 சொத்துக்களை ஏலம் விட இருந்த தடை ஆணை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கக்கோரி கோவையில் உள்ள டான்பிட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ரவி, தனியார் நிதிநிறுவனத்திடம் இருந்து பறிமுதல் செய்த 19 சொத்துக்களையும் மாவட்ட வருவாய் அதிகாரி ஏலம் விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து அந்த சொத்துக்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்