தமிழ்நாட்டில் யூகலிப்டஸ் மரங்கள் நடுவதற்கு தடை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-07-25 23:22 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள வனம் தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பெஞ்ச் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின்படி, மலைப்பிரேதசங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டிகளை திரும்பப்பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் இந்த நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அன்னிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான அறிக்கை தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்ட அளவில் கமிட்டிகள்

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அன்னிய மரங்கள் அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து, அதுதொடர்பாக கடந்த 13-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட அளவில் கமிட்டிகள் உருவாக்கப்படும். அதில், முதன்மை வனப்பாதுகாவலர் தலைவராகவும், அந்தந்த மாவட்ட கலெக்டர், தாவரவியல், விவசாயம், கால்நடை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், வனத்துறை அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.

முதல் மாநிலம்

இந்த கமிட்டி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும். தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் இருந்து 10 ஆண்டுக்குள் அன்னிய மரங்கள் அகற்றப்படும். நாட்டிலேயே அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவு எடுத்து திட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். இந்த திட்டத்துக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை, கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்துக்கான தேசிய வங்கி ஆகிய அமைப்புகளிடம் இருந்து நிதி பெறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நீதிபதிகள் அதிருப்தி

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், 'வனங்களை காப்பது தொடர்பாக அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை' என்று அதிருப்தி தெரிவித்தனர். பின்னர், 'அன்னிய மரங்களை அப்புறப்படுத்த 10 ஆண்டுகள் காத்திருக்க முடியாது. இந்த பணி விரைவாக நடைபெற தனியாரிடம் கூட ஒப்படைக்கலாம். அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவு எடுத்துள்ள அரசே, யூகலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது?' என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர், தமிழ்நாட்டில் இனிமேல் யூகலிப்டஸ் மரங்களை யாரும் நடக்கூடாது. இந்த மரங்களை நடுவதற்கு தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டு, இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்டு 16-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்