சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு;

Update:2023-10-19 18:22 IST

முத்தூர்

முத்தூர் அருகே உள்ள மோளக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கருப்பணன் (வயது 70). கூலித் தொழிலாளி. இவர் தனது குடும்ப பொருளாதார நிலையை மேம்படுத்த ஆடு, மாடு கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது 1 ½ வயதுடைய சிந்து இன பசு மாடு ஒன்று நேற்று காலை 9 மணிக்கு மோளக்கவுண்டன்புதூரில் உள்ள குறுகலான சாக்கடை கால்வாயில் திடீரென்று எதிர்பாராத விதமாக தவறி உள்ளே விழுந்து விட்டது. அங்கிருந்து அந்த பசுமாடு தானாக எழ முடியாமல் உயிர் பயத்தில் அலறியது.

இது பற்றி தகவல் அறிந்த கருப்பணன் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்கடை கால்வாயில் இருந்து பசு மாட்டை பத்திரமாக மீட்க பல வழிகளில் முயன்றனர். ஆனால் அவர்களால் பசுமாட்டை மீட்க முடியாமல் தடுமாற்றம் அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக காலை 9.30 மணிக்கு நேரில் வந்து சாக்கடை கால்வாயில் உள்ளே இறங்கி பசுமாட்டை கயிறு கட்டி எவ்வித காயமும் இன்றி உயிருடன் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். மொத்தம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1 ½ வயது பசுமாட்டை துரிதமாக மீட்ட தீயணைப்பு அதிகாரிகள் குழுவினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.

------------

Tags:    

மேலும் செய்திகள்