இரவில் அதிக நேரம் படிக்காதே என கண்டித்த பெற்றோர்... மாணவர் எடுத்த விபரீத முடிவு

பிளஸ்-2 மாணவரை படித்தது போதும் தூங்க செல் என்று பெற்றோர் கண்டித்துள்ளனர் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கின்றது.;

Update:2025-12-20 04:00 IST

சென்னை,

சென்னை வானகரத்தில் இரவு அதிக நேரம் படித்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் தற்போது அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் காலம். மாணவ மாணவிகள் தீவிரம் கவனம் செலுத்தி படித்து வருவர். இந்நிலையில், அப்படி இரவில் அதிக நேரம் படித்த மாணவரை பெற்றோர் கண்டித்ததில், வருத்தமடைந்து பிளஸ்-2 மாணவர் ஒருவர் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.

சென்னை வானகரம் பகுதியை சேர்ந்தவர் எபிபாத் (வயது 45). இவரது மனைவி ராஜேஸ்வரி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியின் மகன் சஷ்வத் (17), தாய் பணிபுரியும் அதே தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்கள் அடிக்குமாடி குடியிருப்பில் 9-வது தளத்தில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் சஷ்வத் படித்து கொண்டிருந்தார். அப்போது படித்தது போதும் தூங்க செல் என பெற்றோர் கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் சிறுவன் ஒருவர் மாடியில் இருந்து விழுந்ததாக குடியிருப்பு வாசிகள் கூடினர்.

எபிபாத் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி கீழே சென்று பார்த்தபோது சஷ்வத் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறுவனை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே சஷ்வத் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வானகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சஷ்வத் வீட்டில் இரவு அதிக நேரம் படித்து வந்ததாகவும், அவரது பெற்றோர் படித்தது போதும் தூங்க செல் என்று கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மாணவர் சஷ்வத் வீட்டின் பால்கனி வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிது. வேறு ஏதும் காரணம் உண்டா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்