'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update:2022-07-14 03:05 IST

குவிந்து கிடக்கும் குப்பை

ஈரோடு பெரியசேமூர் எம்.ஜி.ஆர். நகரில் ரோட்டோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாாிகள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பை தூசுகள் விழுகின்றன. அதுமட்டுமின்றி அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

அந்தியூரில் இருந்து நகலூர் வழியாக அத்தாணி, கோபிக்கு காலை, மாலை மற்றும் இடைப்பட்ட நேரத்தில் டவுன் பஸ் ஒன்று கடந்த 2013-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்.

சாக்கடையை தூர்வார வேண்டும்

கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையம் பழையூர் கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாய் சரியாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் சாக்கடை கால்வாயும் சேதம் அடைந்து உள்ளது. எனவே சேதம் அடைந்த சாக்கடை கால்வாயை சீரமைப்பதுடன், தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பழையூர்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா?

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள், பொருட்களை திருடும் சம்பவங்கள், வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த சம்பவங்களால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்க மாணிக்கம்பாளையம் வீட்டுவசதிய வாரிய குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

பொதுமக்கள், மாணிக்கம்பாளையம்.

தெருவிளக்கு பொருத்த வேண்டும்

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் 1-வது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், தெருவிளக்குகள் இல்லாத இடத்தில் மின்கம்பம் அமைத்து தெருவிளக்குகள் பொருத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, டெங்கு, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவு வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வாரி, மாநகரில் அனைத்து இடங்களிலும் கொசு மருந்து அடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணதனிஷா, ஈரோடு.

அடிக்கடி மின்தடை

டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒடையாக்கவுண்டன்பாளையம் பகுதியில் முன் அறிவிப்பு ஏதும் இன்றி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மின் சாதனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மின்தடை இல்லாமல் முறையாக மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், டி.என்.பாளையம்.

Tags:    

மேலும் செய்திகள்