சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரியிடம் குறுக்கு விசாரணை

சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சிகளிடம் நேரடியாக குறுக்கு விசாரணையை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.;

Update:2025-12-21 08:51 IST

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று தாக்கினர். இதில் தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

இதில் அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆனால் சில சாட்சிகளை மீண்டும் விசாரிக்கும்படி கைதான ஸ்ரீதர் கோரிக்கை எழுப்பியிருந்தார்.

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை விரைவாக பிறப்பிக்கும்படி ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் இதற்காக சில மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட கோர்ட்டு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதையடுத்து கூடுதலாக 6 மாதம் அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி முத்து கிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியான சி.பி.ஐ. அதிகாரி சுக்லா டெல்லியில் இருந்து வந்து நேரில் ஆஜரானார். அதேபோல சிறையில் இருந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாரும் ஆஜர் ஆனார்கள்.

சி.பி.ஐ. அதிகாரி சுக்லாவிடம் ஸ்ரீதர் குறுக்கு விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கை வருகிற 2-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இந்த வழக்கின் சாட்சிகளிடம் நேரடியாக குறுக்கு விசாரணையை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்