வெளிநாட்டு பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்
நெமிலி பகுதியில் வெளிநாட்டு பறவைகளால் நெற்பயிர்கள் சேதமடைவதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.;
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் நடந்்த விவாதம் வருமாறு:-
புகார் தெரிவிக்கலாம்
விவசாயி:- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு பணம் பெறுகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை என்.சி.சி.எப். நிறுவனம் மூலம் நடத்தக் கூடாது. கொள்முதல் நிலையங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
கலெக்டர்:- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இனி வரும் காலங்களில் சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து பயிர் சாகுபடிக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் புகார்களை தெரிவிக்க லஞ்ச ஒழிப்புத் துறை தொலைபேசி, செல்போன் எண்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணிற்கு விவசாயிகள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
வெளிநாட்டு பறவைகள்
விவசாயி:- நெமிலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஒருவிதமான வெளிநாட்டின கருப்பு பறவைகள் வயல்களில் இறங்கி நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்துகிறது. அவற்றை விரட்ட வழிதெரியாமல் வேதனை படுகிறோம்.
கலெக்டர்:- இது குறித்து உடனடியாக வேளாண்மைத்துறை மற்றும் வனத்துறை மூலம் உரிய ஆய்வு செய்யப்படும்.
விவசாயி:- மழைக்காலத்திற்கு முன்பே ஆறு மற்றும் ஏரி நீர்வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். வாலாஜா ஒன்றியம் வடகால் கிராமத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும். கடந்த ஆண்டு ஏரி நீர் பாசன சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அந்த சங்கத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை.
பிரதி மாதம் 5-ம் நாள் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்த வேண்டும். அரசு பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தில் சிறுதானிய உணவு வகைகள் வழங்க வேண்டும். திமிரி முதல் கலவைப்புதூர் வரை சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.
செறிவூட்டப்பட்ட அரிசி உணவு
மேலும் தனி நபர் குறித்த புகார்களை தனி மனுவாக வழங்கிட கலெக்டர் கேட்டுக் கொண்டார். முன்னதாக, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் டான்பெட் உயிர் உரங்கள் குறித்த கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டு, துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 200 பொது நபர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியில் தயார் செய்த சாம்பார் சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் ஆகிய உணவுகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண் இணை இயக்குனர் வடமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா, மற்றும் விவசாயிகள், துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.