சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பத்திரப்பதிவு: இணைப்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி தனியார் நிலத்தை பத்திரப்பதிவு செய்த திண்டிவனம் இணைப்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் துணைப்பதிவுத்துறை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2022-07-01 16:13 GMT

பிரபல தனியாருக்கு சொந்தமான நிலங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளது. இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் அந்த தனியாருக்கு சொந்தமான நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இருப்பினும் கோர்ட்டின் இந்த உத்தரவை மீறி திண்டிவனம் 2-வது இணை பதிவாளர் அலுவலகத்தில் பல ஏக்கர் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவை மீறி பத்திரப்பதிவு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியன் கடலூர் துணைப்பதிவுத்துறை தலைவருக்கு பரிந்துரை செய்தார்.

4 பேர் பணியிடை நீக்கம்

இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவை மீறி தனியார் நிலத்தை பத்திரப்பதிவு செய்த இணைப்பதிவாளர் அலுவலக சார் பதிவாளர் பொறுப்பு வகித்த மரக்காணத்தை சேர்ந்த சிவானந்தம், உதவியாளர் ஆறுமுகம், இளநிலை உதவியாளர்கள் சண்முகம், ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரையும் கடலூர் துணைப்பதிவுத்துறை தலைவர் ஜனார்த்தனம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனால் திண்டிவனம் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பத்திரப்பதிவு செய்ததில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்