நெல் அறுவடை செய்யும் பணி தாமதம்
ஆனைமலையில் அறுவடை எந்திரம் கிடைக்காததால், நெல் அறுவடை செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.;
ஆனைமலை,
ஆனைமலையில் அறுவடை எந்திரம் கிடைக்காததால், நெல் அறுவடை செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
அறுவடைக்கு தயார்
ஆனைமலை ஒன்றியத்தில் தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 5,400 ஏக்கரில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இதற்காக ஆழியார் அணையில் இருந்து கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய ஆயக்கட்டு பாசனம், பழைய ஆயக்கட்டு பாசனம் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெல் பயிரிட்டனர்.
இந்தநிலையில் தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் கடந்த 8-ந் தேதி நெல் கொள்முதல் மையம் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், போதிய அளவு அறுவடை எந்திரம் கிடைக்காததால் நெல் அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எந்திரம் கிடைப்பதில் சிக்கல்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நடப்பாண்டில் போதிய அளவு யூரியா உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக்காததால், 2½ அடி வளரும் நெற்கதிர்கள், தற்போது 1½ அடி மட்டுமே வளர்ந்து உள்ளது. இதனால் போதிய அளவு விளைச்சல் இல்லை. இதனால் கால்நடைகளுக்கு வைக்கோல் போன்ற தீவன பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.
தற்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் நெல் அறுவடை எந்திரம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அறுவடை எந்திரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே, வேளாண் துறை சார்பில், பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.