கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-03-21 00:15 IST

கோவை

விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் நேற்று கோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். கிராம கோவில் பூசாரிகள் பேரவை கோட்ட அமைப்பாளர் ஜெகநாதன் வரவேற்றார். விஷ்வ ஹிந்து பரிசத் கோவை கோட்ட தலைவர் ஹரி பிரசாத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை தெற்கு மாவட்ட அமைப்பாளர் கோவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார் பேசினார்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 406-வது வாக்குறுதியாக கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. இதனை நிறைவேற்ற வேண்டும், கிராம கோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி மாத ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும், செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தைச் சீர்படுத்தி, விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமக் கோவில்களுக்கும் கட்டணமில்லாத மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்