அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த; ராணுவ அதிகாரி ஜெயந்த் பற்றி உருக்கமான தகவல்
அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி ராணுவ அதிகாரி ஜெயந்த் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.;
தேனி,
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் அருணாசலபிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி, உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய 2 ராணுவ அதிகாரிகள் பலியானார்கள். இதில் ஜெயந்த் தேனி மாவட்டம், ஜெயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்.
மேஜர் ஜெயந்த் குறித்த உருக்கமான தகவல்கள் வருமாறு:-
ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம்-மல்லிகா தம்பதியின் மகன் ஜெயந்த் (வயது 30). அவருடைய மனைவி ஸ்டெல்லா. அவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. ஆறுமுகம் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை
ஜெயந்த் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். பள்ளியில் படிக்கும் போதே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்தார். பள்ளிப் பருவத்தில் துப்பாக்கி சுடும் வீரராக திகழ்ந்தார். துப்பாக்கி சுடும் போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இளம் வயதிலேயே ராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்த ஜெயந்த், துடிப்பாக பணியாற்றி வந்தார். விடுமுறையில் வரும் போதெல்லாம் ஜெயமங்கலத்தில் தனது பாட்டி மற்றும் உறவினர்களை பார்க்க வந்து செல்வார். சில மாதங்களுக்கு முன்பு பாட்டியை பார்த்துச் சென்றார். இந்நிலையில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
தந்தையின் கனவு
ஜெயந்தின் சித்தப்பா முருகன் கூறும்போது, 'ஆறுமுகத்துக்கு இளம் வயதில் இருந்தே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக அவர் முயற்சி செய்த போதிலும் அவரால் ராணுவத்தில் சேர முடியவில்லை. தனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே கூறுவார். பள்ளியில் படிக்கும் போதே, ஜெயந்தும் அப்பாவின் கனவும், தனது கனவும் ராணுவத்தில் சேருவது தான். நிச்சயம் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவேன் என்றார். அவர் சொன்னபடியே ராணுவ அதிகாரியாக பணியாற்றினார். எதிர்காலத்தில் பல உயர் பதவிகளை அடைவார் என்று எதிர்பார்த்த எங்களுக்கு அவருடைய இந்த மரணம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எங்கள் குடும்பத்துக்கு இது பெரிய இழப்பு' என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இன்று அடக்கம்
மேஜர் ஜெயந்த் மரணம் ஜெயமங்கலம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஜெயந்த் உடல் நேற்று இரவு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை சொந்த ஊரான ஜெயமங்கலத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.