பழனியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

வீட்டுமனை பட்டா வழங்க கோரி பழனியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-05 20:15 GMT

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து பழனி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பழனி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நூருல்ஹுதா என்ற பகத்சிங் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார், நகர தலைவர் காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

சாலை மறியல்

போராட்டத்தின் போது, பழனி தாலுகா பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 39 பேருக்கு பட்டா வழங்கும் இடம் அளவீடு செய்து ஒப்படைக்காததை கண்டித்தும், விரைந்து வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர்.

அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் திடீரென்று புதுதாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பழனி தாசில்தார் பழனிசாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், டவுன் போலீசார் விரைந்து வந்து மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது, பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு இடம் ஒப்படைக்கவும், மீதமுள்ளவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பழனியில் மாற்றுத்திறனாளிகளின் மறியல் போராட்டத்தால் புதுதாராபுரம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்