நகராட்சி, பேரூராட்சிகளில் விண்ணப்பம் வினியோகம்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் நகராட்சி, பேரூராட்சிகளில் விண்ணப்பம் மற்றும் டோக்கனை வீடு, வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினர்.;

Update:2023-08-02 01:45 IST

பொள்ளாச்சி

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் நகராட்சி, பேரூராட்சிகளில் விண்ணப்பம் மற்றும் டோக்கனை வீடு, வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினர்.

உரிமை தொகை

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம்(செப்டம்பர்) 15-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி முதற்கட்டமாக கிராமங்களில் விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் முகாமில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆவணங்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக நகராட்சி, பேரூராட்சிகளில் விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. பொள்ளாச்சி தாலுகாவில் பொள்ளாச்சி நகராட்சி, நெகமம், சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர், ஜமீன்ஊத்துக்குளி, கிணத்துக்கடவு ஆகிய பேரூராட்சிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகின்றனர்.

95 சதவீத விண்ணப்பங்கள்

இதேபோன்று ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை, கோட்டூர் பேரூராட்சியில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி தாலுகாவில் முதற்கட்டமாக கிராம ஊராட்சிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விண்ணப்பங்கள் பதிவு முகாம் நடைபெற்று வருகிறது. கிராம ஊராட்சிகளில் உள்ள 102 ரேஷன் கடைகளில் 54 ஆயிரத்து 656 பயனாளிகள் உள்ளனர். தற்போது வரை 95 சதவீத விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

5-ந் தேதி முகாம்

நகராட்சி, பேரூராட்சிகளில் 51 ரேஷன் கடைகள் உள்ளன. 45 ஆயிரத்து 318 பயனாளிகள் உள்ளனர். இன்று (நேற்று) முதல் 4-ந் தேதி வரை விண்ணப்பம், டோக்கன் வினியோகம் செய்யப்படும். ஆனைமலை தாலுகாவில் உள்ள கிராம ஊராட்சிகளில் 69 ரேஷன் கடைகளும், 35 ஆயிரத்து 528 பயனாளிகளும் உள்ளனர். தற்போது 92 சதவீத விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனைமலை, கோட்டூர் பேரூராட்சிகளில் 33 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 27 ஆயிரத்து 317 பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து 5-ந் ்தேதி தொடங்கி, 9-ந் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்