வால்பாறையில் தொடரும் கோடை மழையால் படகு இல்ல தடுப்பணையில் வெளியேறிய உபரிநீர் -பொதுமக்கள் மகிழ்ச்சி
வால்பாறையில் தொடரும் கோடை மழையால் படகு இல்ல தடுப்பணையில் உபரிநீர் வெளியேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.;
வால்பாறை, மார்ச்.27-
வால்பாறையில் தொடரும் கோடை மழையால் படகு இல்ல தடுப்பணையில் உபரிநீர் வெளியேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
கோடை மழை
வால்பாறை பகுதி முழுவதும் கடந்த 13-ந் தேதி ஆலங்கட்டி மழையாக தொடங்கிய கோடை மழை நேற்றும் வெளுத்து வாங்கியது. வால்பாறையில் நேற்று மதியம் 1 மணியிலிருந்து 3 மணி வரை மழை பெய்தது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் குறைந்து விட்டது. இந்த கோடை மழை வருகிற நாட்களிலும் பெய்வதற்கான காலசூழ்நிலை தொடர்ந்து இருந்து வருவதால் கோடைக்காலத்திலும் இதமான காலசூழ்நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
வால்பாறை பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கோடை மழை காரணமாக வால்பாறை பகுதி மக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்தோடு மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
உபரிநீர் வெளியேறியது
நேற்று இடியுடன் கனமழையாக பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வால்பாறையில் பயன்படாத நிலையில் இருக்கும் படகு இல்லம் நிரம்பி வழிந்து உபரிநீர் ஸ்டேன்மோர் ஆற்றில் பாய்ந்தோடியது. இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கி விடும் என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோடை மழையால் தேயிலை செடிகளில் இளந்தளிர் இலைகள் துளிர் விட்டு வளர்ந்து வருகிறது.
வால்பாறை பகுதியை பொறுத்தவரை இந்த கோடை மழையால் தேயிலை விவசாயிகளும் வனத்துறையினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.