சின்னம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம் நியாயமற்றது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

பா.ஜ.க ஆதரவுக் கட்சிகளின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

Update: 2024-03-28 10:44 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் ஒதுக்கீடு பெற்ற சின்னங்களை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தன. இந்த முறையீடுகள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டாது, சார்பற்ற நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்பது பெரும் கவலை அளிக்கிறது.

இந்தியா கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு, பா.ஜ.க ஆதரவுக் கட்சிகளின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நியாயமற்ற நடைமுறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் களம் என்பது போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் அனைத்துக்கும் சம தளமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படிந்து விடாமல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, தேர்தல் நடைமுறைகளும் வாக்குப்பதிவும் நியாயமான, சுதந்திரமான முறையில் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக விரிவான புகார் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்