மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
மின்சார வாரியத்தில் பணியாளர்களின் பணி பாதுகாப்பையும், பணி உத்தரவாதத்தையும் பாதிக்கும் வகையிலான அவுட்சோர்சிங் முறையை கைவிட கோரியும், பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து மின்வாரிய ஊழியர்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு சம்மேளன தலைவர் கிருபாகணேஷ் தலைமை தாங்கினார். இதில் அண்ணா தொழிற்சங்கம், ஐ.என்.டி.யு.சி., ஐக்கிய சங்கம், பொறியாளர் கழகம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தினால் மின்சார வாரியத்தில் அலுவலக பணி மற்றும் மின் நுகர்வோர்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டது.