சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என நாமக்கல்லில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உமா பேசினார்.;
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் உமா பேசியதாவது:-
சிலை அமைப்பாளர்கள் தடையில்லா சான்றுக்கு உதவி கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர் மற்றும் பரமத்திவேலூர் உள்ளிட்ட 4 இடங்களில் இருக்கும் மாற்றுப் பகுதிகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். மசூதி உள்ள சாலைகளில் தொழுகையின்போது அந்த வழியாக விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது
வழிபாட்டிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மதம் தொடர்பான இடங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகளை அமைக்க கூடாது.
விநாயகர் சிலை பாதுகாப்பிற்காக சிலை அமைப்பாளர்கள் பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும். குழுவினரில் 2 பேர் எப்பொழுதும் சிலையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் உமா பேசினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கனகேஸ்வரி, ராஜூ, உதவி கலெக்டர் சரவணன், துணை போலீஸ் சூப்பரண்டு செந்தில்குமார் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.