கம்பத்தில் மாலை நேர உழவர் சந்தை

கம்பத்தில் மாலை நேர உழவர் சந்தையை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;

Update:2023-06-24 00:45 IST

கம்பத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர்சந்தை தினமும் காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழக மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாலை நேர உழவர்சந்தை செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்பேரில் கம்பம் உழவர் சந்தையில் நேற்று மாலை நேர உழவர் சந்தை திறக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, திறந்து வைத்தார். பின்னர் சந்தையில் அவர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி, மாவட்ட வேளாண்மைத்துறை (வணிகம்) துணை இயக்குனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. கம்பம் வடக்கு நகர செயலாளர் வீரபாண்டி, உழவர்சந்தை நிர்வாக அலுவலர்கள், விவசாயிகள், தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

மாலைநேர உழவர்சந்தையில் பாரம்பரிய அரிசி வகைகள், மரச்செக்கு எண்ணெய், சிறுதானியம் மற்றும் சிறுதானிய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், நாட்டுக்கோழி முட்டை, காளான், வத்தல், வடகம் மற்றும் மூலிகைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்