பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்பிறந்த 3 நாளில் பெண் குழந்தை திடீர் சாவுஉறவினர்கள் திரண்டதால் பரபரப்பு

Update:2023-07-01 01:00 IST

நல்லம்பள்ளி:

பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 3 நாளில் பெண் குழந்தை திடீரென இறந்தது. தகவல் அறிந்த உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் குழந்தை சாவு

தர்மபுரி மாவட்டம் சிவாடி அருகே ஊத்துப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். விவசாயி. இவருக்கும், ஆனந்தி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆனந்தி பிரசவத்திற்காக பாளையம்புதூர் அரசு சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளை அழைத்தும் யாரும் வரவில்லை. சிறிது நேரத்தில் குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆனந்தியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டு வந்தனர்.

முற்றுகை

இதனிடையே நேற்று காலை அவர்கள் குழந்தையின் சாவுக்கு காரணமான டாக்டர்கள், மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குழந்தை சாவு குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து இறந்த குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 3 நாளே ஆன பெண் குழந்தை இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்